Posts Tagged ‘இந்திரா காந்தி’

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை!

மே 7, 2010

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை: கசாப்புக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு தயாராக இருந்தாலும் கூட அவரை தூக்கிலிடுவதற்கு ஆள்தான் இல்லையாம். மிகுந்த அனுபவம் உடையவர்களைத்தான் தூக்குத் தண்டனைக் கைதிகளை தூக்கிலிடுவதற்கு அழைப்பார்கள். ஆனால் நமதுநாட்டில் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு கயிறு மாட்டி விடுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்துதான் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் சிறைத் துறையினர். இப்போது கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக தோன்றவில்லை. காரணம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறையிலும் தூக்கு கயிறை மாட்டும் நபர் யாரும் இல்லையாம். மும்பையிலும் கூட யாரும் இல்லையாம்.

தூக்குப் போட யார் வேண்டுமானாலும் வரலாம்: இங்கு மட்டுமில்லை, டெல்லி திகார் சிறையிலும் கூட தூக்கு மாட்ட ஆள் கிடையாது. கடைசியாக திகாரில் 1989ம் ஆண்டுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இங்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களை வரவழைத்துதான் நிறைவேற்றினார்களாம். ஒருவேளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆளே கிடைக்காவிட்டால், காவல்துறையைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், இதைச் செய்ய முன் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என விதிமுறையில் உள்ளதாம்.

“கசாபை தூக்கிலிட தயார்!” – இதோ வந்தாகிவிட்டது, ஒரு பரம்பரை தூக்குப் போடும் ஆசாமி! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர்களில் ஒருவரை தூக்கிலிட்ட கல்லு சிங்கின் மகன் மம்மு ஜலாத் (65), மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட விருப்பம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் இரண்டே நபர்கள் உள்ளனர். இவர்களில் பிரபலமாக மம்மு ஜலாத் என்று அழைக்கப்படும் மம்மு சிங் ஒருவர். அஜ்மல் கசாபுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை யார் தூக்கிலிடுவது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.இந்நிலையில் பயங்கரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை உடனடியாக நிறைவேற்ற தான் தயாராகவுள்ளதாக மம்மு ஜலாத் தெரிவித்துள்ளார். கசாபை தூக்கிலிடுவதை தான் பெருமையாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.கசாபை தூக்கிலிட தனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் தனது மகனான பவன்கூட இந்த பணியை செய்ய தயாராகவுள்ளான் என்றும் அவர் கூறியுள்ளார். மம்மு ஜலாத்தின் தாத்தா, இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் தூக்குத் தண்டனை கைதிகளை தூக்கிலிடும் பணியை செய்தார். இதையடுத்து மம்மு ஜலாத்தின் தந்தை கல்லு சிங்கும் இப்பணியை செய்தார். இப்போது தூக்கிலிடும் பணியை செய்து வரும் மம்மு ஜலாத், தனது மகன் பவனுக்கும் இப்பயிற்சியை அளித்து வருகிறார்.