Posts Tagged ‘அட்வொகேட் செக்ஸ்’

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

திசெம்பர் 27, 2021

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

கொரோனா காலமும், காணோலி விசாரணையும், நீதிமன்றங்களும்: காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2021 கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியபோது முதலில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே, ஊரடங்கில் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நீதிமன்றங்கள் தொடங்கி பள்ளிகள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஏராளமாக இருந்தால், விரைந்து முடிக்க காணொளி காட்சி முறை கொண்டு வந்தாக வேண்டிய சூழல் இருந்தது[2].

கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை: கொரோனா தொற்று ஆரம்பித்த சமயத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடியாகவும் விசாரணை நடைபெறுகிறது, அதே நேரத்தில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது. அனைத்து வழக்கு விசாரணையும் இப்படியே நடந்து வருகிறது. சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது.

செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்: இந்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்[3]. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவே வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[4]. நிச்சயமாக, அந்த வீடியோ பார்த்தவர்கள், அந்த வக்கீலின், அட்வகேட்டின், வழக்கறிஞரின் நடவடிக்கை தலைகுனிய வைக்கும். மேலும், அந்த பெண் ஏன் அவ்வாறு அத்தகைய கேவலமான செயலுக்கு உட்படுத்தப் பட்டாள் என்றும் தெரியவில்லை. கருப்பு நிற அங்கி முதலியவற்றைப் பார்க்கும் போது, அப்பெண்ணும் ஒரு வழக்கறிஞரா, ஜூனியரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஒருவேளை, பெண்ணின் அடையாளம் தெரியக் கூடாது என்ற ரீதியில், அவை தெரிவிக்கப் படவில்லை போலும்.

தானாகவே, சொந்தமாகவே, கேட்காமலே (suo moto) வழக்காக எடுத்துக் கொண்டது: இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்[5]. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.டி. சந்தான கிருஷ்ணன் “மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் விர்ச்சுவல் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் போது அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக” அவரை சஸ்பெண்ட் செய்தது[6]. மிகவும் மன வருத்தம் அளிப்பதாக இருக்கிறது[7], இது போன்ற சம்பவங்களைக் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது எனத் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்[8]. சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்[9]. இதனை சூ மோட்டோ வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்[10].

வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது: நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது[11]. முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ், “இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம்” என்றும் “பதவியை ராஜினாமா செய்து விடலாமா?” என்று யோசித்ததாகவும் வேதனை தெரிவித்தார்[12]. நிச்சயமாக, அந்த நீதிபதி அந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பது தெரிகிறது. நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் காக்கக் கூடிய அத்தொழிலை செய்பவர்கள், இவ்வாறு ஈடுபட்டது, மிகக் கேவலமாகும். ஏற்கெனவே வக்கீல்களைப் பற்றி பலவிதமான செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் எப்படி வழக்கறிஞர்கள் ஆனார்கள் என்ற திகைப்பும் ஏற்படுகின்றன. அந்நிலையில், வீடியோவில் சிக்கிக் கொண்ட அந்த “பலான / செக்ஸ் வழக்கறிஞர்” அத்தொழிலுக்கு அவமானம் தான்.

நீதி, நேர்மை, நியாயம் காக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் இத்தகைய குற்றங்கள் ஏன் தொடர்ந்து நடந்து வருகின்றன, நீதி, நேர்மை, நியாயம்….போன்றவை ஏன் மதிக்கப் படுவதில்லை, மாறாக ஏளனப் படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக சினிமா, டிவி சீரியல்களில் இவை கிள்ளுக்கீறையாக மதிக்கப் படுகின்றன. நகைச்சுவை போர்வையில் ஆபாசப் படுத்தப் படுகின்றன. அதுபோலவே, அத்துறையைச் சேர்ந்தவர்களும் இழிவு படுத்தப் படுகின்றனர். சமீபகாலங்களில் நீதிபதிகளின் தீர்ப்புகளும், நீதிபதிகளும் விமர்சிக்கப் படுகின்றனர். நிச்சயமாக, நீதிபதி நியமனங்களில் அரசியல், ஜாதி, மதம் போன்ற காரணிகள் செயல்படுகின்றன. ஏனெனில், அவ்விதமாக நியமனங்கள் நடக்கின்றன. நீதிமன்றங்களிலும் கட்சிக்கு ஒரு சங்கம் செயல்பட்டு வருகின்றது. அதுபோல, ஜாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. பிறகு பாரபட்சம், ஒருதலைப்பட்சம், பாகுபாடு, வித்தியாசம், வேறுபாடு, அரசியல் அழுத்தம் போன்றவையும் இருக்கத்தான் செய்யும். அவற்றையும் மீறி தீர்ப்புகள் கொடுக்கப் படவேண்டும். ஆகவே, நிச்சயமாக அத்தொழிலில் இருப்பவர்கள் சுத்தமாகவும், நேர்மையாகவும், யோக்கியமானவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயம், அவசியம் மற்றும் அத்தியாவசியம் உள்ளது. அப்பொழுது தான், அவர்கள் சட்டமீறல்கள் செய்யாமலும், குற்றங்களில் ஈடுபடாமலும் இருக்க முடியும்.

© வேதபிரகாஷ்

27-12-2021


[1] ஏ.பிபி.லைஃப், நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் சஸ்பெண்ட்சிபிசிஐடி வழக்கு பதிவு!, By: ABP NADU | Updated : 22 Dec 2021 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/chennai/cb-cid-to-probe-lawyer-s-act-on-camera-31615

[3] NEWS18 TAMIL, மிகப்பெரிய அசிங்கம்.. ராஜினாமா செய்ய நினைத்தேன்உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை, First published: December 23, 2021, 22:40 IS; LAST UPDATED : DECEMBER 23, 2021, 22:40 IST.

https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[5] புதியத்தலைமுறை, வழக்கறிஞரின் ஒழுங்கீனத்தால் பதவியை ராஜினாமா செய்ய நினைத்தேன்நீதிபதி வேதனை, kaleelrahman, தமிழ்நாடு, Published :23,Dec 2021 03:38 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/125450/Attorneys-Disorder-Thought-to-resign-Judge-tormented

[7] இடிவி.பாரத், வழக்கறிஞரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினேன்நீதிபதி வேதனை, Published on: Dec 23, 2021, 2:56 PM IST.

[8]  https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/advocate-misbehave-on-video-conference-mhc-judge-has-upset/tamil-nadu20211223145626901

[9] தமிழ்.ஒன்.இந்தியா, கேமரா ஆனில் இருப்பது தெரியாமல்.. பெண்ணிடம் தவறாக நடந்த வக்கீல்.. வாழ்நாள் தடை போட்ட சென்னை ஐகோர்ட், By Vigneshkumar, Updated: Tuesday, December 21, 2021, 20:27 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-ordered-to-ban-a-lawyer-who-misbehaved-with-woman-during-a-video-trial-442879.html

[11] தினத்தந்தி, ஆன்லைன் விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர்..!, பதிவு : டிசம்பர் 23, 2021, 10:06 PM

[12] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/12/23220640/2978084/Lawyer-who-conducted-irregular-in-online-trial.vpf.vpf